110 வயது பாட்டியின் பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்!

பெற்றோரை வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளே கவனிக்காமல் விட்டுவிடும் அவலம் பல இடங்களில் நடக்கிறது. அப்படியே தங்களுடன் வைத்து கவனித்தாலும், அவர்களது சந்தோஷம், தேவையை அறிந்து பெரும்பாலானோர் செயல்படுவது கிடையாது.

அதனால் பல முதியோர்கள் தங்களது கடைசி கால கட்டத்தில், ஏதோ வாழ வேண்டும் என்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வாழ்க்கை நிலையில், யாரும் இல்லாத 110 வயது மூதாட்டிக்கு கிராம மக்களே சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் 110 வயது பாட்டி ராமாயி. 1913-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரும் இறந்து விட்டார்.

ராமாயிக்கு குழந்தைகளும் இல்லை. கணவரின் மறைவுக்கு பிறகு பேரையூர் கிராமத்தில் உள்ள தனது தாய்வழி சொந்தங்களுடன் வசித்து வருகிறார்.

அவர்களுடன் வசித்து வந்தாலும் தனக்கு தேவையான உணவை அவரே சமைத்து சாப்பிடுகிறார். சுளுக்கு, மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சினைகளையும், குழந்தைகளுக்கு ஏற்படும் ‘மாந்தம்’ பிரச்சினையும் குணப்படுத்துவதில் மூதாட்டி ராமாயி கைதேர்ந்தவர் ஆவார்.

தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை பல ஆண்டுகளாக குணப்படுத்தி வருகிறார்.

ராமாயியின் இந்த சேவை பேரையூர் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், விளையாட்டு கழகத்தினர் மற்றும் ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி ராமாயி பாட்டியின் 110-வது பிறந்தநாளை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ராமாயி பாட்டி பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்-சிறுமிகள் முன்னிலையில் கேக் வெட்டினார்.

பின்பு அதனை அனைவருக்கும் வழங்கினார். 110 வயது ஆன போதிலும் ராமாயி பாட்டி கம்பீரமாக நின்று கேக் வெட்டியது கிராம மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராமாயி பாட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈஸ்டர் தினத்தில் ஊர் மக்களுக்கு பாயாசம் செய்து இலவசமாக வழங்கி வந்துள்ளார்.

தற்போது வயது முதிர்வு காரணமாக அதனை நிறுத்தி விட்டார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாயாசம் தயாரித்து, அவரது கையால் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பாட்டி ராமாயி வழங்கிய கேக் மற்றும் பாயாசத்தை சாப்பிட்ட கிராம மக்கள், அவரிடம் ஆசி பெற்றனர். ஊர் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்து பாட்டி ராமாயி நெகிழ்ச்சி அடைந்தார்.

ராமாயி பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!