சீனாவில் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலி, மீண்டும் தன்னுடன் வருவதற்காக காதலர் 21 மணிநேரம் மண்டியிட்டு கெஞ்சிய விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டடது.
சீனாவில் நடக்க கூடிய விசயங்கள் எப்போதும் மூடுபனியாகவே காணப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு உலக நாடுகள் சீனாவை கைகாட்டின. ஆனால், அதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.
எனினும், அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. சீனாவில் பிறப்பு விகிதம் சரிவை முன்னிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன்படி, கல்லூரி மாணவர்கள் காதல் செய்வதற்கு என்றே ஏப்ரல் 1 முதல் 7 வரையிலான நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று மற்றொரு வினோத சம்பவம் சீனாவில் நடந்து உள்ளது.
அந்நாட்டின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் டஜாவ் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் அலுவலகம் ஒன்றின் வாசலில் நேர்த்தியான ஆடை அணிந்த இளைஞர் ஒருவர், மண்டியிட்டபடி காணப்பட்டார். இப்படி ஒரு மணிநேரம், 2 மணிநேரம் அல்ல.
அவர் மணிக்கணக்கில் மண்டியிட்டபடி இருந்து உள்ளார். கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் 1 மணியளவில் தொடங்கிய அவரது இந்த போராட்டம் அடுத்த நாள் காலை 10 மணிவரை நீடித்தது.
அவருக்கு அருகே ரோஜா பூங்கொத்துகள் காணப்பட்டன. இதில் இருந்தே அவர் காதல் வசப்பட்டு உள்ளார் என தெரிய வருகிறது. தன்னை விட்டு பிரிந்து போன காதலி, மீண்டும் தன்னுடன் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய வினோத போராட்டம் இது.
இதுபற்றி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கடும் பனி மற்றும் மழை பொழிவின்போதும் காதலியின் அலுவலகத்திற்கு வெளியே தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக அமர்ந்து இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒன்று திரண்டு, அடையாளம் தெரியாத அந்த நபரை அணுகி உள்ளனர். இந்த முயற்சியை கைவிடும்படி அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், விடாப்படியாக அந்த நபர், சில நாட்களுக்கு முன் தனது காதலி பிரிந்து சென்று விட்டார்.
நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் திரும்பி வரவேண்டும் என கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்து காவல் அதிகாரிகள் கூட வந்து அந்நபரை சமரசப்படுத்த முயன்று தோல்வி அடைந்தனர்.
தொடர்ந்து அதீத அன்பில் சிக்குண்ட நிலையில் இருந்த அவரிடம் இருந்து, அந்த காதலி விலகி இருக்கும்படியும், அதுவே காதலிக்கு நல்லது என்ற வகையில், சமூக ஊடக பயனாளர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
கெஞ்சி கேட்பதில் எல்லாம் காதல் வந்து விடாது என்றும் கூறியுள்ளனர். 21 மணிநேரம் காதலிக்காக ஒரே இடத்தில் மண்டியிட்டு, கெஞ்சி கொண்டிருந்த அந்த நபர், இதனை அறிந்து பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!