மூடநம்பிக்கைக்கு பலியான 10 வயது சிறுவன் – உ.பி.யில் பரபரப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10). விவேக் கடந்த 23-ந்தேதி இரவு திடீரென காணாமல் போனான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் விவேக் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுவனை தேடி வந்தனர்.


இந்நிலையில் சிறுவன் விவேக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் பிணமாக கிடந்தான்.

தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது 2½ வயது மகன் மனநலம் குன்றியவர் என்றும், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தையின் உடல்நிலை தேறவில்லை. இதனால் அனூப் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மந்திரவாதியை அணுகி உள்ளார்.

அந்த மந்திரவாதி நரபலி கொடுத்தால் உனது குழந்தையின் உடல்நலம் தேறும் என தூண்டி உள்ளார். இதை நம்பிய அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரபலி கொடுத்தால் மனநல பிரச்சினை தீர்ந்து விடும் என்று மூடநம்பிக்கைக்கு 10 வயது சிறுவன் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!