கால்வாயை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தூய்மை பணியாளர்கள் சாவு!

தாவணகெரே அருகே கால்வாயை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தூய்மை பணியாளர்கள் இறந்தனர்.

கால்வாய் பணிகள்

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா பசவனகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சசிதர். இவர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சத்தியப்பா (வயது 45) , மைலப்பா (42). இவர்கள் 2 பேரும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள பாதாளச்சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை இவர்கள்தான் சுத்தம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஒன்றை சுத்தம் செய்யவேண்டியிருந்தது.

இதற்கான பொறுப்பு கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சசிதருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் உடனே தூய்மை பணியாளர்களான சத்தியப்பா, மைலப்பாவை அழைத்து சென்று, கால்வாயை சுத்தம் செய்யும்படி கூறினார். அதன்படி 2 பேரும் கழிவுநீர் கால்வாய்குள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

மூச்சு திணறி சாவு
கால்வாயின் மேல் பகுதியில் சிமெண்டு பலகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளியே இருந்து காற்று எதுவும் உள்ளே வரவில்லை. இதை அறிந்த அவர்கள், தைரியமாக உள்ளே சென்று அங்கிருந்த கழிவுகளை அகற்றினர்.

அப்போது திடீரென்று 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. கூச்சலிட்டு வெளியே இருந்தவர்களை அழைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கால்வாய்குள் இறங்கி 2 பேரையும் தேடினர். அப்போது அங்கு 2 பேரும் மயங்கி கிடந்தனர்.

இதையடுத்து அவர்களை மீட்ட பொதுமக்கள் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து பிலிச்சோடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விஷ வாயு தாக்கியது

பின்னர் இது குறித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கால்வாயில் விஷ வாயு நிரம்பி காணப்பட்டது. இதை அறியாமல் 2 பேரும் உள்ளே இறங்கியதில், அந்த விஷ வாயு தாக்கி இறந்ததாக தெரியவந்தது.

இதற்கிடையில் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பிற்கு சசிதர்தான் காரணம் என்று சக தொழிலாளிகள் மற்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இதை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து வளர்ச்சித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி பிலிச்சோடு போலீசார் வழக்கு பதிவு ெசய்து சசிதரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!