ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா பதவியில் இருந்து நீக்கம்…!


தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஜனாதிபதியாக ஜேக்கப் ஜூமா பதவி வகித்து வருகிறார்.

அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், தலைமையை மாற்ற கட்சி திட்டமிட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

ஆனால் எதற்கும் பிடிகொடுக்காத ஜூமா, தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிகிறது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணம், ஜேக்கப் ஜூமா தேர்தலுக்கு முன் பதவி விலக வேண்டும் என்பதுதான்.

ஜேக்கப் ஜூமா மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவரை உடனடியாக பதவி விலக வைப்பது தொடர்பாக துணை ஜனாதிபதி ராமபோசா பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

திங்கட்கிழமை இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் பதவி விலகுவதாக தெரியவில்லை. மேலும் சில மாதங்கள் பதவியில் நீடிக்க விரும்புகிறார்.

இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கட்சியின் தேசிய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் ஏஸ் மகாஷுலே தெரிவித்தார். இந்த முடிவு ஆளுங்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும்.

ஆனால், ஜேக்கப் ஜூமாவின் ஜனாதிபதி பதவிக்கு இது எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஜேக்கப் ஜூமா தொடர்ந்து பதவியில் இருந்தால் பாராளுமன்றத்தில் அவர் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!