வீட்டில் யூ-டியூப்பில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற 15 வயது சிறுமி- நாக்பூரில் அதிர்ச்சி!

யூ-டியூப்பில் வீடியோ பார்த்து 15 வயது சிறுமி வீட்டில் குழந்தை பெற்ற அதிர்ச்சி சம்பவம் நாக்பூரில் நடந்து உள்ளது.

செல்போனை உடைத்த தாய்


நாக்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி எந்த நேரமும் செல்போனும், கையுமாக இருந்து உள்ளார். சமீபத்தில் சிறுமி செல்போனில் சமூகவலைதளம் மூலமாக தெரியாத நபர்களிடமும் பேசுவது அவளின் தாய்க்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த தாய் சிறுமியின் செல்போனை உடைத்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தாய் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டார். வீட்டில் பல்வேறு இடங்களில் ரத்த கறைபடிந்து இருந்தது. சந்தேகமடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தனக்கு மாதவிடாய் என கூறினார். எனினும் தாய்விடாமல் சிறுமியிடம் துருவி, துருவி விசாரித்தார்.

கற்பழித்த வாலிபர்
அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமி இன்ஸ்டாகிராமில் யார் என்றே தெரியாத தாக்குர் என்ற வாலிபரிடம் பழகி வந்து உள்ளார். சம்பவத்தன்று அவர் சிறுமியை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். சிறுமி வாலிபரை சந்திக்க சென்று இருக்கிறார்.

வாலிபர் சிறுமியை அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானாள்.

நடந்ததை வீட்டுக்கு தெரியாமல் சிறுமி மறைத்து இருக்கிறார். மேலும் வீட்டில் பிரசவம் பார்ப்பது எப்படி என தனது தாய் செல்போன் மூலம் யூ-டியூப்பில் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டார்.

வீட்டில் பிரசவம்
சம்பவத்தன்று சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். அவர் குழந்தை அழுதால் சத்தம் கேட்டுவிடும் என, அதை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது.

குழந்தையின் உடலை ஒரு பையில் போட்டு வீட்டின் மொட்டை மாடியில் மறைத்து வைத்தது தெரியவந்தது. சிறுமி கூறியதை கேட்டு தாய்க்கு தலைசுற்றியது. உடனடியாக அவர் சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கற்பழித்த வாலிபரை தேடிவருகின்றனர். இதேபோல குழந்தையை கொன்றதாக கூறப்படும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!