சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா..? மின்கம்பத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!

தெலுங்கானா மாநிலம், மேதக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. மாமியார் வீட்டிற்கு செல்லும் சேகர் தனக்கு சீர்வரிசையாக நகைகள் போட வேண்டுமென அடிக்கடி கேட்டு வந்தார்.

ஆனால் அவரது மாமியார் சேகரின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் நேற்று மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று நகைகள் போட வேண்டுமென வற்புறுத்தினார்.

இதற்கு சேகரின் மாமியார் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உட்கார்ந்து கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சேகர் தனது மாமியார் நகைகள் போடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே கீழே வருவேன் என அடம்பிடித்தார்.

இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சேகரை சமாதானப்படுத்தி கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் சேகருக்கு அறிவுரைகளை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!