அம்மன் கோவில் பூசாரியாக மாறிய சாப்ட்வேர் என்ஜினீயர்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள்.

இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

பிரசித்தி பெற்ற பொங்கல் விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இக்கோவிலில் முதன்மை அர்ச்சகராக இருந்தவர் நாராயணன் நம்பூதிரி. இவர் ஆற்றுக்கால் கோவில் பரம்பரையை சேர்ந்தவர்.

இவரது மகன் சாந்தனு. நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. பட்டப்படிப்பு படித்த சாந்தனு, படிப்பு முடிந்த பின்னர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.

அதன்பின்பு வெளிநாட்டிலும் வேலை பார்த்தார். இந்தநிலையில் அவருக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

இதையடுத்து அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அர்ச்சகராக பணியில் சேர்ந்தார். இது பற்றி அவர் கூறியதாவது:- வருமானம் தரும் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தாலும் நான் குடும்பத்தைவிட்டு பிரிந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் எனக்கு கோவில் அர்ச்சகராக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் என் மனதுக்கு பிடித்ததை செய்யும்படி அறிவுறுத்தினார்.

எனது மனைவியும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. இதனால் நான் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இது மனதுக்கு நிம்மதியாக உள்ளது, என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!