முகச்சுருக்கம், கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் வெந்தயம்!

வெந்தயமானது பெண்களுக்கு சரும மற்றும் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை தருகிறது. வெந்தயத்தை நீரில் நன்றாக ஊறவைத்து, அரைத்து முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவிவர முகம் பொலிவு பெறும்.

பாலுடன் சேர்த்து அரைத்தும் முகத்தில் பூசி வரலாம். இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அந்த நீரினைக் கொண்டு முகத்தினை கழுவிவர சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குவதோடு தோலிற்கு ஈரப்பதத்தையும் தருகிறது.

மேலும் இதில் உள்ள வைட்டமின்-சி முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, முகச்சுருக்கத்தினை குறைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க, முடிஉதிர்வை கட்டுப்படுத்துவதோடு, முடியின் வறட்சி தன்மையை நீக்கி, மிருதுவைத் தரும்.

வெந்தயத்தை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்திவர முடிஉதிர்வைத் தடுக்கும். தலையில் பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பு காணப்பட்டால் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் தயிருடன் கலந்து அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகுத் தொல்லை படிப்படியாகக் குறையும்.

ஊறவைத்த வெந்தயத்தினை கறிவேப்பிலை உடன் சேர்த்து அரைத்து தலையில் பூசிக் குளித்து வர இளநரையைக் கட்டுப்படுத்தும். வெந்தயத்தை ஊறவைத்து, தேங்காய் பாலுடனோ அல்லது சிறிதளவு தேங்காய் எண்ணைய்யுடனோ அரைத்து தலையில் பூசி குளித்து வர கேசத்தின் வறட்சி நீங்கி மிருது தன்மை அடையும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!