4-ம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை சொல்லி கொடுக்கும் சிக்ஷா ரோபோ!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சைதன்யா பி.யூ.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

இவர் தொடக்க பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்று கொடுப்பதற்காக ‘சிக்ஷா’ என்ற மனிதவடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.

அந்த ரோபோ 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இதுகுறித்து அதன் கண்டுபிடிப்பாளர், அக்ஷய் மஷேல்கர் கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதனால் அவர்களது படிப்பு பாதிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகங்கள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதற்காக வீடுதோறும் செல்போன்கள் மூலம் மாணவர்கள் படிப்பை கற்றனர். இதனால் சில மாணவர்களின் பாதை மாற தொடங்கியது.

செல்போன், கணினி போன்றவற்றால் தத்ரூபமாக பாடம் நடத்திவிட முடியாது. அது பாடம் கற்பிப்பதை மந்தமாக்கிவிடும் அதை மாற்றும் நோக்கில் நான் ‘சிக்ஷா’ என மனித ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளேன்.

அந்த ரோபோவில் செயல்திறன் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு தான் தற்போது உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக நான் அதை வடிவமைத்தேன். இந்த ரோபோ மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை தெளிவாக கொடுக்கும் திறன் கொண்டது.

குறிப்பாக வாய்ப்பாடு, குழந்தைகளுக்கான கவிதை, பாடல் ஆகியவற்றை இந்த ரோபோ சுலபமாக கற்று கொடுக்கும். இந்த ரோபோ தற்போது தயாராக உள்ளது.

ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்க வரவில்லை. விரைவில் அது வரும் என்றார். இவரது இந்த முயற்சி பெரிய சாதனையாக கருதப்படுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!