கூண்டுக்குள் சிக்கிய தொழிலாளி- கோழி பிடிக்க சென்று மாட்டிக்கொண்ட பரிதாபம்!

காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்தால் அவற்றை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சிறுத்தை போன்ற பயங்கர விலங்குகள் ஊருக்குள் வந்தால் அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க ரகசிய கேமிராக்கள் அமைத்து சிறுத்தை எங்கெங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிப்பார்கள்.

பின்னர் அந்த பகுதியில் கூண்டுகள் அமைத்து அதனை பிடிக்க ஏற்பாடு செய்வார்கள். இதுபோல உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, புலந்த்ஷாகர் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் புலந்த்ஷாகர் கிராமத்துக்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் ஆங்காங்கே கூண்டுகளும் அமைத்தனர்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கிராம மக்கள் திரண்டு வந்து கூண்டுக்குள் சிறுத்தை சிக்கி கொண்டதா? என்று பார்ப்பது வழக்கம். சம்பவத்தன்றும் பொதுமக்கள் அங்கு சென்ற போது கூண்டுக்குள் வாலிபர் ஒருவர் அழுதுகொண்டிருப்பதை பார்த்தனர்.

அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தெரிவிக்க, அங்கிருந்து ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கூண்டை திறந்து வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரிடம் கூண்டுக்குள் சிக்கியது எப்படி? என்று கேட்டனர்.

அதற்கு அவர் நேற்றிரவு அந்த பகுதியில் கோழி ஒன்று நின்றது. அதனை நைசாக பிடிக்க சென்றேன். அந்த கோழி கூண்டுக்குள் ஓடியது. நானும் கூண்டுக்குள் சென்று கோழியை பிடிக்க முயன்றேன். ஆனால் கோழி தப்பி விட்டது.

நான் மட்டும் கூண்டுக்குள் சிக்கி கொண்டேன் என்று கூறினார். இதனை கேட்டு வனத்துறையினரும், கிராம மக்களும் வாய்விட்டு சிரித்தனர்.

கோழி பிடிக்க போய் இப்படி மாட்டி கொண்டாயே என்று சிலர் கிண்டல் செய்தனர். இதற்கிடையே இந்த நிகழ்வுகளை அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!