பிரபல ரவுடி பினு பொலீசாருக்குக் கொடுத்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள்!


நான் பெரிய ரவுடி இல்லை; சர்க்கரை நோயால் அவதிபட்டு வருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என ரவுடி பினு பரிதாபமாக வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளி பரிவாரங்களோடு மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரிய அளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, ஒரேநேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.

சென்னையில் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. சென்னையில் வாழும் பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

ரவுடி பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். அவரது முதல் மனைவி இறந்துபோனார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார்.

கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்பட்டது. ரவுடி பினுவை போலீசார் சுட்டு பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசாரின் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே பினு போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

நான் பெரிய ரவுடி இல்லை; சர்க்கரை நோயால் அவதிபட்டு வருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள். 50-வது பிறந்தநாளை கொண்டாட கரூரில் இருந்து என் தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான்.

நான் திருந்தி வாழ ஆசைப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தேன். நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை என கண்ணீர் விட்டு கதறி உள்ளான் பினு. – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!