ஆசிரியை வழக்கில் 52 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்க உதவிய சிகரெட் துண்டு!

அமெரிக்காவின் பர்லிங்டன் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் ரீட்டா கர்ரன். பள்ளி ஆசிரியையான அவருக்கு சம்பவம் நடந்தபோது வயது 24. 1971-ம் ஆண்டுகுடியிருப்பில் வைத்து யாரும் இல்லாதபோது அவர்படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பர்லிங்டன் காவல் துறை தீவிர விசாரணை நடத்தியும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. எனினும் இந்த வழக்கை நீர்த்து போக விடாமல், 2019-ம் ஆண்டு துப்பறியும் நிபுணர்கள் மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.

இதில், சிகரெட் துண்டு ஒன்று ரீட்டாவின் உடல் அருகே கிடந்தது விசாரணைக்கு உதவியுள்ளது. இதன்படி, சிகரெட் துண்டை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில், அது வில்லியம் டீரூஸ் என்பவருடையது என தெரிய வந்தது.

சம்பவத்தின்போது, வில்லியமுக்கு 31 வயது. அவருக்கு திருமணம் நடந்து 2 வாரம் ஆகியிருந்தது. சம்பவத்தன்று இரவில், குடியிருப்பை விட்டு வெளியே நடைபயிற்சிக்காக வில்லியம் சென்று உள்ளார்.

அந்த 70 நிமிடங்களில் கொலை சம்பவம் நடந்து உள்ளது. ரீட்டாவின் அறையிலும் உடன் வசித்தவர்கள் யாரும் அப்போது இல்லை.

திரும்பி வந்த வில்லியம் தனது மனைவி மிச்செல்லேவிடம், தான் வெளியே சென்று வந்த விவரங்களை யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளார். இதுபற்றி 2019-ல் துப்பறியும் நிபுணர்கள், வில்லியமின் முன்னாள் மனைவியான அந்த மிச்செல்லேவிடம் விசாரணை நடத்தியதில் தெரிந்து கொண்டனர்.

அதனால், ரீட்டா கொலைக்கு வில்லியம் காரணம் என உறுதியான முடிவுக்கு வந்துள்ளோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், ரீட்டா கொலை சம்பவத்திற்கு பின்னர் தாய்லாந்துக்கு சென்ற வில்லியம் பின்னர் மத துறவியாகி உள்ளார். சிறிது காலத்திற்கு பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிய அவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

1986-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் போதை பொருளை அதிகம் உட்கொண்டதில் வில்லியம் உயிரிழந்து கிடந்து உள்ளார். ரீட்டா மரணத்திற்கு யார் காரணம் என தெரியாமலேயே அவரது பெற்றோர் மறைந்தனர்.

ஆனால், ரீட்டாவின் சகோதர, சகோதரிகள் இதுபற்றி பர்லிங்டன் போலீசார் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிந்து கொண்டனர். சம்பவத்தின்போது, வில்லியம் டீரூஸ் மற்றும் அவரது மனைவி மிச்செல்லே இருவரும் ரீட்டாவின் குடியிருப்புக்கு மேல்மாடியில் வசித்ததும் தெரிய வந்தது. வில்லியமின் ஆவண பதிவு எதுவும் இல்லாதபோதும், அவரது உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு பரிசோதனை செய்ததில் வில்லியம் குற்றவாளி என தெரிய வந்தது என துப்பறியும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதன்பின்னர் போலீசாரிடம் உண்மையை மறைத்த விவரங்களை மறுவிசாரணையில், மிச்செல்லே ஒப்பு கொண்டுள்ளார்.

வில்லியம் திடீரென வன்முறையாளராக மாறி விடுவார் என உறவினர்களிடம் நடந்த விசாரணையில் இருந்து தெரிய வந்து உள்ளது. இதனால், குற்றவாளியான வில்லியமுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாதபோதும், 52 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கை முடித்து வைக்க அந்த சிகரெட் துண்டு உதவியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!