சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா…!

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது.

அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு ஆயுத ஏவுதளங்களில் இந்த தளமும் ஒன்று. இந்த விமானப்படை தளம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டதாகும். இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது.

இந்த பலூன் சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது. அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க சீனா இந்த ரகசிய உளவு பலூனை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பிற்கு இந்த பலூன் அச்சுறுத்தலாக விளங்கியது.

அந்த உளவு பலூனை அணு ஆயுத ஏவுதளம் அருகே சுட்டு வீழ்த்தினால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்தல் நிலவியதால் உளவு பலூன் அட்லாண்டிக் கடல்பரப்பில் பறந்தபோது அதிபர் ஜோ பைடன் உத்தரவையடுத்து சீன உளவு பலூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின.

சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த உளவு பலூனை மீட்க்க அமெரிக்க கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்ட படைகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கடலில் விழுந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

உளவு பலூனில் இருந்த கருவிகளின் சிதறிய பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய பாகங்களை தேடும் பணியையும் அமெரிக்க விமானப்படை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!