கொட்டும் பனிக்கு நடுவே கர்ப்பிணி – தோளில் தூக்கிச் சென்ற ராணுவவீரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார். ஆனால் வாகனங்கள் வராததால் அவரால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் தவித்தார்.

இதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்குள்ள பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகே உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

அந்த பெண்ணின் குடும்பத்தினர், கர்ப்பிணியை தோளில் சுமந்து வந்து உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே குப்புவாராவில் உள்ள தாங்கர் என்ற பகுதியில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட கர்ப்பிணியை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றி மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!