நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 30 ஆண்டுகளில் 56 பணியிட மாற்றம்!

நாட்டில் நேர்மையான அதிகாரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்ற முடிவதில்லை என்பது தீராத சோகம்தான். ஆனால் அதற்காக இப்படியா என்று கேட்கிற அளவுக்கு அரியானா மாநிலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி 30 வருடங்களில் 56 பணியிட மாற்றங்களைச் சந்தித்துள்ளார்.

அவர், அசோக் கெம்கா. கடந்த 9-ந் தேதி 56-வது பணியிட மாற்றத்தை சந்தித்துள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்துறையில் கூடுதல் தலைமைச்செயலாளராக பதவி வகித்த இவர், இப்போது ஆவணக்காப்பகத்துறையில் கூடுதல் தலைமைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆவணக்காப்பகத்துறைக்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இது 4-வது முறை.

இவர் 1991-ம் ஆண்டின் அரியானா தொகுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 2012-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராம் நில பேரத்தின் மாற்றத்தை அதிரடியாக ரத்து செய்ததன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தார்.

தற்போது அவர் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு ஊழலை வேரறுக்க லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைவர் பதவியை நாடி கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- ஊழல் என்பது எப்படி பரவும் என்பது உங்களுக்கு தெரியும். ஊழலைப் பார்க்கும்போது என் உள்ளம் புண்படுகிறது.

ஊழல் புற்றுநோயை வேரறுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது பணி வாழ்க்கையை தியாகம் செய்துள்ளேன்.

அரசின் கொள்கைப்படி ஊழலை வேரறுக்காமல், ஒரு குடிமகன் தனது உண்மையான திறனை அடைவதற்கான கனவை ஒருபோதும் நனவாக்க முடியாது. அவன் அன்றாடம் பிழைப்புக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவான்.

நான் எப்போதுமே ஊழலுக்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னின்று உள்ளேன். ஊழலை ஒழிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் முக்கிய அங்கமாக உள்ளது.

எனது பணி வாழ்க்கை முடியும் நிலையில், நான் லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், ஊழலுக்கு எதிராக உண்மையான போர் தொடுப்பேன்.

எவ்வளவு உயர்வானவராக இருந்தாலும், வல்லமை படைத்தவராக இருந்தாலும் ஊழல் செய்தால் விட்டு விட மாட்டேன் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!