பூனைக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய ஆசிரியர் தம்பதி!

செல்லப்பிராணியான பூனையை வீடுகளில் வளர்க்க பலரும் விரும்புவார்கள். சில வீடுகளில் பூனைகள் வீட்டில் ஒருவர்போல பழகிவிடும்.

கர்நாடகாவில் ஒரு தம்பதி பூனையை தனது மகள் போல பாவித்து வளைகாப்பு நடத்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடரமணசெட்டி. இவரது மனைவி நிர்மலா.

இவர்கள் கப்பஹள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் பெண் குழந்தை இல்லை. மகள் இல்லை என்ற குறை இவர்களுக்கு இருந்தது.

இவர்களுக்கு பூனை வளர்ப்பதில் ஆர்வம். அதனால் வீட்டில் ஒரு பெண் பூனையை அதற்கு சுப்பி என பெயரிட்டு மகள் போன்று வளர்த்து வந்தனர்.

தற்போது அந்த பூனை கர்ப்பமாக உள்ளது. இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துவது போல் அந்த பூனைக்கும் வீட்டில் வளைகாப்பு நடத்தினர்.

பூனையை குளிப்பாட்டி புதிய ஆடை அணிவித்தனர். பின்பு அதற்கு மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, வளையலிட்டு, ஆரத்தி எடுத்தனர். பூனைக்கு பிடித்தமான உணவினையும் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தங்களது பக்கத்து வீட்டினரையும் அழைத்திருந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் வெங்கடரமண ஷெட்டி கூறுகையில், “எங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லாததால், பெண் பூனையை சுப்பி என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வருகிறோம்.

அந்த பூனை கர்ப்பமாக இருந்ததால் அதற்கு வளைகாப்பு நடத்தினோம். எனக்கு மகள் இருந்தால் எப்படி வளைகாப்பு நடத்துவேனோ அதை போல நடத்தினோம்.

இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார். பூனைக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!