உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்த்த பெற்றோர் – 3 வயது சிறுவனுக்கு நடந்த சோகம்!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா – பிரான்ஸ் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பெனால்டி ஷூட் – அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அரங்குகள் அமைத்தும் போட்டி ஒளிபரப்பப்பட்டது.

அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் (கிளப்) கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது.

இந்த தனியார் கேளிக்கை விடுதியில் 6-வது மாடியில் போட்டி ஒளிபரப்பப்பட்டது. இதை காண அந்த கேளிக்கை விடுதியில் உறுப்பினராக உள்ள வங்கி அதிகாரியான அவினாஷ் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் சென்றுள்ளார்.

அவினாஷ் மகன் ஹிர்யன்ஷ் ரதோட் (வயது 3). குடும்பத்தினருடன் கேளிக்கை விடுதியில் அவினாஷ் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, இரவு 11 மணியளவில் 3 வயது சிறுவன் ரதோட் 11 வயதான மற்றொரு சிறுவனுடன் கேளிக்கை விடுதியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளான். 5-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு மாடிப்படிக்கட்டு வழியாக கீழே இறக்கியுள்ளான்.

கண்ணாடியால் அமைக்கப்பட்ட அந்த படிக்கட்டில் ஒரு பகுதியில் கண்ணாடி இல்லாமல் காலியாக இருந்துள்ளது. மாடிப்படியில் இருந்து சிறுவன் ரதோட் கிழே இறங்கியபோது நிலை தடுமாறி கண்ணாடி அமைக்கப்படாமல் இருந்த படியில் இருந்து கீழே விழுந்துள்ளான்.

இதில், சிறுவன் ரதோட்டின் தலை உள்பட உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ரதோட் நள்ளிரவு 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் கேளிக்கை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!