குழந்தையை பெற்றெடுத்து புற்றுநோயால் போராடி வரும் தம்பதி!

பிரிட்டனில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம்பதிக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜேப்பர்சன் லவ்டே. இவரது மனைவி பெத்தானி.

ஜேம்ஸிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜேம்ஸிற்கு ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் ஜேம்ஸிற்கு புற்றுநோய் உறுதியானது தம்பதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஜேம்ஸிற்கு கிமோ தெரப்பி சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதி முடிவு செய்தனர்.

அதன்படி, பெத்தானி கர்ப்பமானார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற பெத்தானிக்கு சில மாதங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. பெத்தானி 21 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது உடல்நிலையில் அசாதரணத்தை உணர்ந்துள்ளார்.

இது அனைத்தும் கர்ப்பம் தொடர்பான அறிகுறிகள் என்று நினைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் பெத்தானியை பரிசோதனை செய்ததில் அவருக்கு நான்-ஹோட்கின் லிம்போமா என்கிற வகை புற்றுநோய் இருப்பது உறுதியானது.

இதனால் தம்பதி அதிர்ச்சியடைந்தனர். கணவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது மனைவிக்கும் புற்றுநோய் எப்படி வந்திருக்க முடியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இருவரும், புற்றுநோய் சிகிச்சையில் இருந்த நிலையில், பெத்தானிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய, ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை, வொர்செஸ்டர்ஷயர் அக்யூட் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தம்பதியை நலம் விசாரித்து வரும் நெட்டிசன்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!