‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார் இந்திய பெண்!

திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதலில், இந்த போட்டியானது திருமதி உலகின் அழகிய பெண் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர் திருமதி உலக அழகி என 1988-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. பெருமளவில் அமெரிக்காவே அதிக வெற்றிகளை தட்டி சென்றுள்ளது. 2001-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் என்பவர் முடி சூடினார்.

அவர் தற்போது 2022-2023-ம் ஆண்டுக்கான திருமதி இந்திய அழகிக்கான நடுவராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இன்று நடந்த திருமதி உலக அழகி போட்டியின் இறுதி சுற்று வரை இந்தியா முன்னேறி இருந்தது. இதனால், முடிவு அறிவிக்கும் வரை பரபரப்பு காணப்பட்டது.

இறுதியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல், திருமதி உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த சர்கம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள திருமதி இந்தியா மேலாண் அமைப்பு, நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின்பு கிரீடம் திரும்ப கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று, புதிதாக கிரீடம் சூடிய சர்கம் வெளியிட்ட செய்தியில், 21 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீடம் நமக்கு கிடைத்து உள்ளது. அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இந்தியாவை மற்றும் உலகை நேசிக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!