மீண்டும் புயலா..? வங்கக்கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. எனினும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.

மேலும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் வரும் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுமா? என்பது குறித்த அதன் நகர்வை பொறுத்துதான் தெரிவிக்க முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தற்போதைய கணிப்பின்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, இலங்கை மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!