இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் – சோலாப்பூரில் வினோதம்!

சோலாப்பூரில் ஒரே வாலிபரை இரட்டை சகோதரிகள் திருமணம் செய்த வினோத சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை இரட்டை சகோதரிகள்

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி (வயது36). ஐ.டி. துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகின்றனர். பிங்கியும், ரிங்கியும் பிறந்தது முதல் ஒன்றாகவே வசித்து வருகின்றனர்.

2 பேரும் ஒருவரை விட்டு ஒருவர் ஒருநாள் கூட தனியாக இருந்தது இல்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் இரட்டை சகோதரிகளின் தந்தை உயிரிழந்துவிட்டார். எனவே அவர்கள் தாயுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் தாயுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது.

அப்போது, அவர்கள் சோலாப்பூா் மாவட்டம் மல்சிராஸ் தாலுகா அக்லுஜ் கிராமத்தை சேர்ந்த அதுல் என்ற வாலிபரின் காரில் தான் தங்களது தாயாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளனர். அப்போது, அதுல் இரட்டை சகோதரிகளுக்கு ஆறுதலாக இருந்து உள்ளார். மேலும் அவர் இரட்டை சகோதரியின் குடும்பத்துக்கு உதவிகள் பல செய்து இருக்கிறார்.

ஒரே நபரை திருமணம் செய்தனர்

இதனால் அதுலை இரட்டை சகோதரிகளுக்கு பிடித்துப்போனது. எனவே அவர்கள் அதுலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அதுலிடம் பேசினர்.

அதுலும் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார். இதையடுத்து அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பேசி திருமணத்துக்கு அனுமதி வாங்கி உள்ளனர்.

இந்தநிலையில் இரட்டை சகோதரிகள், டிரைவர் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை சோலாப்பூரில் குடும்பத்தினர், நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்து உள்ளது.

இந்தநிலையில் இரட்டை சகோதரிகள், ஒரே நபரை திருமணம் செய்த வினோத சம்பவம் தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த திருமணம் தொடர்பான மீம்ஸ், நகைச்சுவைகளும் பரவி வருகின்றன.

போலீசில் புகார்

இதேபோல இரட்டை சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்தது சட்டபூர்வமாக செல்லுமா, ஒழுக்கமானதாக கருதப்படுமா என்பது போன்ற பல கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் மீது அக்லுஜ் போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்பேரில் போலீசார் சட்டப்பிரிவு 494-ன் கீழ் (மனைவி அல்லது கணவன் உயிரோடு இருக்கும் போது வேறு நபரை திருமணம் செய்தல்) வழக்கு பதிவு செய்து உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!