மாணவனை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை கைது!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த 21-ந் தேதி இப்பள்ளி மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அந்த மாணவர் தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறினார். மேலும் தங்களை தலைமை ஆசிரியை கீதா ராணி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஈரோடு கலெக்டரிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 30-ந் தேதி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 பட்டியலின மாணவர்களை தலைமை ஆசிரியை கீதாராணி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவானார்.

இதற்கிடையே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வந்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!