நெடுஞ்சாலையில் பஸ்களை வழிமறித்து வம்பு செய்யும் காளை மாடு!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரியார் நகர் முதல் திருவொற்றியூர் மார்க்கெட் வரை காளை மாடு ஒன்று பல நாட்களாக சுற்றித்திரிகிறது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் இந்த காளை மாடு, வேண்டுமென்றே அந்த வழியாக செல்லும் பஸ்களை வழி மறித்து நடுரோட்டில் நிற்கும்.

அருகில் உள்ள பொதுமக்கள் யாரேனும் விரட்ட நினைத்தாலும் முடியாது. சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சாலையின் குறுக்கே பஸ்சை வழிமறித்து நின்றுவிட்டு பின்னர் தானாகவே அங்கிருந்து விலகி சென்று பஸ்களுக்கு வழி விடுகிறது. காளை மாட்டின் இந்த வம்பு, பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.

அந்த காளை மாட்டை பற்றி தெரிந்த டிரைவர்கள், பஸ்சை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் தெரியாத பஸ் டிரைவர்கள், பஸ்சை திருப்பிச்செல்லும் நோக்கில் தொடர்ந்து இயக்கினாலோ அல்லது ‘ஹாரன்’ அடித்தாலோ கோபம் அடையும் காளை மாடு, பஸ்சின் முகப்பு விளக்குகளை தலையால் முட்டி இடித்து சேதமாக்கிவிடுகின்றது.

வம்பு செய்யும் இந்த காளை மாட்டை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் காளை மாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!