இன்ஸ்டாவில் இணைந்த ஷாலினி… நீங்க எப்போ அஜித்? – ரசிகர்கள் கேள்வி

80-களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஷாலினி, தமிழில் விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கு இடையே காதல் மலர இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து விலகிய ஷாலினி பூப்பந்து விளையாட்டு நன்றாக விளையாடுவார் என்பது அனைவரும் அறிந்தது. அதோடு சட்டப் படிப்பும் முடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் ஷாலினி, சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாக்ராமில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. தொடங்கிய சில நாட்களிலே 1 லட்சம் ஃபாலோயர்களை நெருங்கவுள்ளார்.

மேலும், முதல் பதிவாக அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ஷாலினி, மீண்டும் அஜித்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷாலினி இன்ஸ்டாக்ராமில் இணைந்ததையொட்டி மகிழ்ச்சியில் உள்ள அஜித் ரசிகர்கள் அவரது பதிவின் கீழ் சில கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள். யாரும் எதிர்பாராத விதமாக ஷாலினி இணைந்ததைப் போல் அஜித் எப்போது இணைவார் எனவும், ‘ஷாலினி வந்துட்டாங்க.

நீங்க எப்போ அஜித்’ எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். பட ப்ரோமோஷனுக்கும், செய்தியாளர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வரும் அஜித் சமூக வலைத்தளத்தில் இணைய வாய்ப்பில்லை என்கின்றனர் அஜித்திற்கு நெருக்கமானவர்கள்.

அஜித் பற்றிய அப்டேட்டுகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அவரது இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: nakkheeran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!