ரம்மி விளையாடிய மனைவி… கணவன் கண்டித்ததால் எடுத்த துயர முடிவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண், கணவன் கண்டித்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் இப்படியொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் அஜய்குமார் மண்டலின் மனைவி பந்தனா ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 70 ஆயிரம் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கணவர் அஜய் குமார் மண்டல் மனைவி பந்தனாவை கண்டித்துள்ளார் இதில் விரக்தி அடைந்த மனைவி பந்தனா நேற்று வேலைக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். கணவர மட்டும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பந்தனா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தனா உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!