பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம்- புனே டாக்டர் அசத்தல்!

புனேயில் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் இலவசமாக பிரசவம் பார்த்து அசத்தி வருகிறார்.

பிரசவம் இலவசம்

தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் பிரசவத்துக்கு இலவசம் என எழுதப்பட்டு இருக்கும். அதாவது கர்ப்பிணி பெண்களை ஆட்டோ டிரைவர்கள் இலவசமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார்கள். இதைவிட ஒருபடி தாண்டி புனேயில் ஒரு டாக்டர் கடந்த 11 ஆண்டுகளாக பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வரும் சம்பவம் தற்போது தெரியவந்து உள்ளது.

அந்த அசத்தல் டாக்டரின் பெயர் கணேஷ் ராக். இவர் புனே ஹடாப்சர் பகுதியில் தனியார் மகப்பேறு ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். கடந்த 11 ஆண்டுகளில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த 2 ஆயிரத்து 400 கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பிரசவம் பார்த்ததாக கணேஷ் ராக் கூறுகிறார்.

குழந்தையை பார்க்க வரமாட்டார்கள்

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கும் முயற்சியை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினேன். தற்போது இது பல மாநிலங்கள், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வரை பரவி உள்ளது. ஆஸ்பத்திரி தொடங்கப்பட்ட காலத்தில் பெண் குழந்தை பிறந்தால், குடும்பத்தினர் அந்த குழந்தையை பார்க்க வர மாட்டார்கள். அந்த காட்சிகள் என்னை மிகவும் பாதித்தது.

எனவே பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பினேன். ஆண் குழந்தை பிறந்தால் சில குடும்பத்தினர் அதை கொண்டாடுவார்கள். மேலும் ஆஸ்பத்திரி கட்டணத்தையும் செலுத்துவார்கள்.

அதே நேரத்தில் பெண் குழந்தை பிறந்தால் அவர்களின் அணுகுமுறை வேறுமாதிரி இருக்கும். எனவே தான் எங்களது ஆஸ்பத்திரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மருத்துவ கட்டணத்தை தள்ளுபடி செய்தோம். இன அழிப்பு கட்டணமின்றி 2 ஆயிரத்து 400-க்கும் அதிகமான பெண் குழந்தைகள் பிறக்க பிரசவம் பார்த்து உள்ளோம்.

அரசு ஆய்வின்படி கடந்த 10 ஆண்டில் 6 கோடி பெண் சிசுக்கள் கலைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒருவகையான இன அழிப்பு தான். ஆண் குழந்தை வேண்டும் என மக்கள் பெண் சிசுவை கலைக்கின்றனர்.

இது ஒரு மதம், மாநிலம், நாடு சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் தற்போது நாங்கள் நடத்திய ஆய்வின்படி பெண் சிசுக்கள் கலைப்பது குறைந்து வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!