ஊரடங்குக்கு பயந்து தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கினர்.

அவர்கள் சாலையோரம், வயல்வெளிகள், மலைகளிலும் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தபடி மெதுவாக நடந்து செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது. சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் ஊழியர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!