5-ம் வகுப்பு மாணவன் எறிந்த துண்டு சீட்டு – பின் நடந்த விபரீதம்

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வாரம் அரையிறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். இவருடன் 5ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரனும் சென்றுள்ளார்.

மாணவி தேர்வு எழுத வகுப்பறைக்குள் சென்ற பிறகு, 5ம் வகுப்பு மாணவன் தனது சகோதரிக்கு உதவுவதற்காக துண்டு சீட்டில் கேள்விக்கான பதில்களை குறிப்புகளாக எழுதி தூக்கி எறிந்துள்ளான்.

இதில், அந்த துண்டு சீட்டு தவறுதலாக சகோதரியின் அருகில் இருந்த மற்றொரு மாணவி மீது விழுந்துள்ளது. அந்த மாணவி, தன் மீது காதல் கடிதம்தான் வீசியுள்ளான் என்று நினைத்து இதுகுறித்து தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அண்ணன் தனது சக நண்பர்களை அழைத்துக் கொண்டு 5-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக அடித்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் பயந்துப்போன 6ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது சகோதரனை அடித்து இழுத்துச் சென்றது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவனை குடும்பத்தினர் தேடி வந்தனர். மேலும் பேலீசிடமும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மஹத்பானியா ஹால்ட் ஸ்டேஷன் ரெயில் தண்டவாளத்தின் அருகே கை மற்றும் உடல் பாகங்கள் புதைந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல் பாகங்களை தோண்டி எடுத்தனர். பின்னர், மாணவனின் குடும்பத்தினரை வரவழைத்து அடையாளம் காண வைத்தனர். மாணவன் அணிந்திருந்த சட்டையை அடையாளம் கண்டுக்கொண்ட குடும்பத்தினர், இது காணாமல் போன தங்களது பிள்ளைதான் என்று உறுதி செய்தனர்.

இந்நிலையில், மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியுடன் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) வினோத் குமார் சிங் மற்றும் பிற அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்தைச் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் அண்ணன் உள்பட அனைவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதல் கடிதம் என்ற தவறான புரிதலால், 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!