கடனை திருப்பித்தராத வாலிபருக்கு நடந்த கொடூரம்!

“இப்படியெல்லாமா நடக்கும்?” என்று கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூர சம்பவம் ஒன்று, ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடந்திருக்கிறது. இந்த நகரைச் சேர்ந்த ஜெகநாத் பேஹரா என்ற 22 வயது வாலிபர், தனது தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக ஒருவரிடம் ரூ.1,500 கடன் வாங்கி உள்ளார்.

இந்த கடனை அவரால் சொன்னபடி, 30 நாளில் திருப்பித்தர முடியவில்லை.இதற்காக கடன் கொடுத்தவர், மற்றொருவரை சேர்த்துக்கொண்டு, ஜெகநாத்தின் கைகளை 12 அடி நீளமுள்ள கயிறால் கட்டி, மற்றொரு முனையை தங்களது ஸ்கூட்டரில் கட்டிக்கொண்டு அவரை மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு ஓடிவர வைத்துள்ளனர்.

இந்த கொடூரக்காட்சியைக் கண்டவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது காட்டுத்தீ போல பரவியது.2 கி.மீ. தொலைவை கடந்த நிலையில், சுதாகத் சதுக்கம் என்ற இடத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் சேர்ந்து ஜெகநாத்தை மீட்டனர். அதைத்தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடூர தண்டனை குறித்து ஜெகநாத், போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள், ஜெகநாத்தைக் கட்டி இழுத்துச்சென்ற ஸ்கூட்டரையும் கைப்பற்றினர்.

2 கி.மீ. தொலைவுக்கு ஜெகநாத், ஸ்கூட்டருடன் பிணைத்து கட்டப்பட்டு ஓட வைக்கப்பட்டபோது, அதை போக்குவரத்து போலீசார் பார்த்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது.இந்த சம்பவம், கட்டாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!