நான் அடங்கி போகமாட்டேன்- பெண் சாமியார் அன்னபூரணி மீண்டும் ஆவேசம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் அமைத்து அவரை தேடி வருபவர்களுக்கு தீட்சை கொடுத்து வருகிறார். அவர் அம்மன் போல வேடமிட்டு நடனம் ஆடிக்கொண்டே பக்தர்களுக்கு தீட்சை கொடுப்பதால் டான்ஸ் சாமியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

கடந்த புத்தாண்டையொட்டி அவர் செங்கல்பட்டில் அருள் வாக்கு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அருள்வாக்கு தொடர்பான போஸ்டர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோக்களும் சாமியார் ஆன பிறகு அவர் அருள்வாக்கு கூறும் வீடியோவும் ஒன்றாக இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் பரபரப்பான சாமியாராக பேசப்பட்டார். அப்போது இந்த புகாரால் அருள்வாக்கு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாமியார் அன்னபூரணி பக்தர்களுக்கு தீட்சை கொடுக்க அவர்களிடம் பணம் வசூலிப்பதாக பக்தர் ஒருவர் ஆடியோ குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இது தொடர்பாக சாமியார் அன்னபூரணி விளக்கம் அளித்துள்ளார். அவர் ஆவேசமாக கூறியதாவது:- இன்று, நேற்று அல்ல கடந்த 6 வருடங்களாகவே ஆன்மீக தேடுதலில் இருப்பவர்கள் இங்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம் தீட்சைக்கு குரு தட்சணை வாங்கி ஒவ்வொருவருக்கும் ஆன்மீக அனுபவம் கொடுக்கிறேன்.

ஒவ்வொருவரையும் இறைநிலையில் நிலைபெற வைத்துக் கொண்டு இருக்கிறேன். இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கு இலவசத்துக்கு மதிப்பு இல்லை. இந்த நிமிடம் வரை மக்கள் இங்கு வந்து பயன் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் எவ்வளவோ, பித்தலாட்டம், மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலி வேஷம் போட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

நான் இங்கு உண்மையான சக்தியையும், ஆன்மீகத்தையும் போதித்து கொண்டு தான் இருக்கிறேன். நான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. இயற்கை கொடுத்த வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்னை உணர்ந்து வருகிற மக்களுக்கு ஆன்மீக தீட்சை கொடுத்து ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். நான் தீட்சை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இங்கு எல்லாவற்றையும் நேருக்கு நேர் சந்தித்து வருகிற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

என்னை சீண்டினால் நொறுங்கி போகும் ஆள் நான் கிடையாது. என்னிடம் உண்மை இருக்கிறது. சத்தியம் இருக்கிறது. யாருக்கும் பயப்பட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இங்கு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் அடங்கியும் போக மாட்டேன். இயற்கை எதற்காக என்மூலம் செயல்பட்டு மக்களுக்காக வந்ததோ அதை நடத்தியே தீரும். இயற்கையை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!