சத்யாவை திட்டமிட்டே தீர்த்து கட்டினேன்- குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவியை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பாக திடுக்கிட வைக்கும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரது மனைவி ராமலட்சுமி. இவர் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவர்களது மகள் சத்திய பிரியா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

அதே போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ், சத்திய பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலை சத்யபிரியா ஏற்காமலேயே இருந்து வந்துள்ளார்.

இருப்பினும் அவரை பின் தொடர்ந்து சென்று சதீஷ், காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகரில் உள்ள கல்லூரிக்கு தினமும் மின்சார ரெயிலில் சத்திய பிரியா சென்று வந்துள்ளார். நேற்று மதியம் வழக்கம் போல சத்திய பிரியா கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்திய பிரியாவிடம் சென்று பேசினார்.

ஆனால் சத்திய பிரியா சதீசிடம் பேச மறுத்து தாம்பரம்-கடற்கரை மின்சார ரெயிலில் ஏறுவதற்கு முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சத்திய பிரியாவை ரெயில் முன்பு திடீரென தள்ளி விட்டார். இதைப் பார்த்து ரெயில் நிலையத்தில் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். அதற்குள் சத்திய பிரியா மீது ரெயில் மோதியது. இதில் தலை துண்டாகி சத்திய பிரியா தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

அவரது துண்டிக்கப்பட்ட தலையும், உடலும் அருகருகே தண்டவாள பகுதியில் போய் விழுந்தன. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த துணிகர கொலை சம்பவத்தை நேரில் கண்டதும் ரெயில் பயணிகள் அங்குமிங்கும் கூச்சல் போட்ட படி ஓடி அலைமோதினார்கள். அதற்குள் மாணவியை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த வாலிபர் சதீஷ் ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டு தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி சத்திய பிரியாவை கொன்று விட்டு தப்பி ஓடி தலைமறைவான சதீசை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாம்பலம் ரெயில்வே போலீசார் சத்யபிரியாவின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

4 தனிப்படைகள் பல்வேறு இடங்களுக்கு சென்று சதீசை தேடினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சத்திய பிரியாவை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி வாலிபர் சதீஷ் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சத்திய பிரியாவை தான் காதலித்தேன். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அவரை எப்படியாவது எனது மனைவியாக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதனை பல முறை சத்திய பிரியாவிடம் நேரில் சொல்லியுள்ளேன்.

கடந்த 2 ஆண்டுகளாகவே சத்திய பிரியாவை பின் தொடர்ந்து சென்று பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் சத்திய பிரியா மனம் மாறி விடுவார் என்று எண்ணினேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை உதாசீனப்படுத்திக் கொண்டே இருந்தார். என்னை காதலிக்க மறுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மீது சத்திய பிரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அப்போது காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். என்னை எச்சரித்து, சத்திய பிரியாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர். நானும் சத்திய பிரியாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தேன். இதன் பின்னர் ஒரு கட்டத்தில் இனி சத்திய பிரியாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றே நினைத்தேன்.

ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. சத்திய பிரியாவை மறக்க முடியாமல் தவித்தேன். எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையடுத்து சத்திய பிரியாவை கொலை செய்து விட திட்டம் போட்டேன்.

தினமும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்துதான் சத்திய பிரியா கல்லூரிக்கு செல்வார். இதனால் அங்கு வைத்து ரெயிலில் தள்ளி விட்டு கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன். இதற்காக நேற்று மதியம் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் முன் கூட்டியே சென்று காத்திருந்தேன். பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சத்திய பிரியா தனது தோழியுடன் வந்ததை பார்த்ததும் அவரது அருகில் சென்று பேசினேன். அப்போது அவர் என்னை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எவ்வளவு நாட்களாக பின் தொடர்ந்து செல்கிறோம். நம் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரே என்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. நான் ஏற்கனவே முடிவு செய்து வந்தபடி சத்திய பிரியா ரெயில் முன்பு தள்ளி விட்டேன். இதில் ரெயில் அவர் மீது மோதியதும் அங்கிருந்த பயணிகள் கூட தொடங்கினார்கள். அங்கிருந்தால் நம்மை பிடித்து விடுவார்கள் என பயந்து ரெயில் நிலையத்தில் இருந்து வேகமாக ஓடி விட்டேன். எனக்கு கிடைக்காத சத்திய பிரியா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்ற எண்ணத்திலேயே இப்படி செய்து விட்டேன்.

இவ்வாறு கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சதீசை கைது செய்துள்ள போலீசார் விடிய விடிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொலையாளி சதீஷ் சிறையில் அடைக்கப்பட உள்ளார். கோர்டுக்கு அழைத்துச் செல்லும் போது பொதுமக்கள் யாரேனும் சதீசை தாக்கி விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருதலைக்காதலால் மாணவியின் உயிரை பறித்த வாலிபர் சதீசுக்கு கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்று சத்திய பிரியாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!