வழிகாட்டியாக வாழ்ந்த 120 வயது பாட்டி மரணம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் கன்னியம்மாள்(120). இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி 30-க்கும் மேற்பட்ட பேரன்,பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் ஆகியோர் உள்ளனர்.

அனைவரும் வசதிவாய்ப்போடு இருந்து வருகின்றனர். கன்னியம்மாளின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு தனது பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்தார். தன்வேலையை தானே செய்து கொள்வதும், தனக்குரிய உணவை அவரே தயார் செய்து சாப்பிட்டு வந்துள்ளார்.


115 வயது வரை வேலை செய்து வந்த அவர் அதன்பிறகு சற்று தளர்வடைந்தார். இருந்தபோதும் தனது வாரிசுகளுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி இயற்கையான உணவுகளை உண்ணவேண்டும், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.

சுற்றுப்புற மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த கன்னியம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

கன்னியம்மாளின் குடும்பத்தினரே ஒரு கிராமம் போல் திரள சுற்றுப்புற கிராம மக்களும் ஒன்றுகூட தாரை தப்பட்டை முழங்க பாட்டியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

அனைவரும் கன்னியம்மாள் பாட்டிக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். 40 வயதிலேயே பலர் தங்கள் வேலைகளை கூட செய்ய முடியாமல் தளர்ந்து விடும் நிலையில் 120 வயது வரை வாழ்ந்து இப்பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கன்னியம்மாள் பாட்டியின் மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி கிராமத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!