“ஜோக்கர்” பட பாணியில் கழிவறை கட்டாமல் மோசடி செய்த காண்ட்ராக்டர்..!


கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நெம்பர் 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆனைகட்டி, ஆலமேடு, மாங்கரை, பெரிய ஜம்முக்கண்டி, சின்ன ஜம்முக்கண்டி, கூட்டுபுளிக்காடு, கண்டிவழி ஆகிய ஆதிவாசி கிராமங்கள். இதில் ஆலமரமேடு மலைப்பகுதியில், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

வனப்பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்தில் எந்த குடியிருப்பிலும் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. பாம்பு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில், காலைக்கடன் கழிப்பதற்காகச் சென்ற பலரும் பாம்பு, காட்டு யானைகளிடம் சிக்கி, பலியான துயர சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு வீட்டில் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதமாக, மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கழிப்பறைகளைக் கட்டும் ஒப்பந்தப்பணி ஈஸ்வரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்டு மாதத்தில் இந்த பணி முடிக்க வேண்டும். பணி விரைந்து முடிக்க 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பணி உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், இப்போது வரையிலும் எந்த வீட்டிலும் முழுமையாக கழிப்பறை கட்டப்படவில்லை.

இதுவரை 8 வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளும், கதவு, கழிப்பறை பேசின் எதுவும் வைக்கப்படாமல் அரைகுறையாகவும் உள்ளன. ஆனால் 45 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலர், கலெக்டரிடம் ஆவணங்களை சமர்பித்து விட்டார். வங்கி மூலம் அதற்குரிய ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது.

பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, ஒட்டு மொத்தமாக ஒப்பந்ததாரர் அபகரித்துக் கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அருகில் உள்ள ஆதிவாசி கிராமங்களிலும் கழிவறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


‘ஜோக்கர்’ பட பாணியில், கழிப்பறை கட்டித்தருவதாகக் கூறி, காண்ட்ராக்டர் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பஞ்சாயத்தில் பிரகாஷ் என்பவர் மூலமாகதான் ஈஸ்வரனை தெரியும். கழிப்பிடம் கட்டுவதற்காக முதலில் ஆதார் கார்டு, பேங்க் புக், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டனர். இதற்கென, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 30 ரூபாய் மற்றும் ஒன்பதாயிரத்து 970 ரூபாய் என இரண்டு தவணையாக 12 ஆயிரம் ரூபாய் எங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 100 நாள் வேலை பணியாளர்களை பயன்படுத்தாமல் எங்களையே குழி பறிக்க கூறினர். அதன்படி நாங்களே தான் கழிப்பறைக்கு குழி தோண்டினோம். ஒருநாள் எங்கள் பகுதிக்கு ஈஸ்வரனுடன் வந்தவர்கள், பேங்குக்கு வந்து எழுதிக்கொடுங்கள். பணம் வந்தால் மட்டுமே கழிப்பிடம் கட்ட முடியும் என்றனர். அதை நம்பி நாங்களும் எழுதிக்கொடுத்தோம். ஆனால், இதுவரை வரவில்லை. போனில் அழைத்துக்கேட்டால் அலட்சியப்படுத்துகிறார்கள். எங்களை ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு விரைவில் எங்களுக்கு கழிப்பறை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பழங்குடியின கிராமம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்டது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுபற்றி காலையில்தான் எனக்கு தகவல் தெரிந்தது. உடனே காண்டிராக்டரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். நேரில் வந்து விளக்கமளிப்பதாக கூறினார். மக்களை ஏமாற்றியது நிரூபணம் ஆகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!