பாபநாசம் பட பாணியில் நண்பரை கொன்று வீட்டுக்குள் புதைத்த நபர்!

ஆலப்புழா மாவட்டம் ஆரியாடு பகுதியை சேர்ந்தவர் பிந்துமோன் (வயது 43). தொழிலாளி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் காணவில்லை என்று ஆலப்புழா வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன பிந்துமோனின் நண்பரான சங்கனாச்சேரி அருகே பாயிப்பாட்டு பகுதியை சேர்ந்த முத்துகுமாரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையின் தரையில் புதிதாக கான்கிரீட் போடப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பேரில், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கான்கிரீட்டை உடைத்து தேடிய போது, பிந்துமோன் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே முத்துகுமார் தலைமறைவாகி விட்டார். அவர் நண்பரான பிந்துமோனை கொலை செய்து விட்டு, வீட்டில் குழி தோண்டி புதைத்து உள்ளார். வெளியே தெரியாமல் இருக்க கான்கீரிட் போட்டு மூடி உள்ளார்.

இந்நிலையில் முத்துக்குமாரின் மொபைல் பேசி யை பின் தொடர்ந்து சைபர் செல் மூலம் தேடிய போது இவர் ஆலப்புழா மாவட்டம், கலவூர் அருகில் உள்ள ஐ.டீ.சீ. குடியிருப்பில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரை காவலில் எடுத்த செங்கனாச்சேரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு எவ்வாறு இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். அதன் பின்னர் கைதான முத்துக்குமார் செங்கனாச்சேரி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் ரிமான்ட் செய்யப்பட்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!