கல்யாண ராணியின் வலையில் சிக்கிய 15 பேர் – லாரி டிரைவர் அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா, இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ரம்யா ஓராண்டுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்திட முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடி வந்தார். அதே ஆப் மூலமாக அறிமுகமாகிய பெண் ஒருவர் தான் கணவரை இழந்தவர் என்றும், நான் உங்களைப் போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்தார்.

பின்னர் திருமணம் முடிந்து ஒரு நாள் மட்டும் வீட்டிலிருந்த அந்த பெண் செந்தில் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை, பணம் மற்றும் செல்போனுடன் திடீரென மாயமானார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு- டிரைவர் செந்திலை ஏமாற்றி விட்டு தலைமறைவான அந்த பெண் ஏற்கனவே கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சலவை தொழிலாளி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உள்பட பலரை இதே வகையில் ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தாயரித்து வருகிறார்கள். ஆனால் அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பெண் தனது வழக்கறிஞர்கள் மூலம் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் செந்தில் உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதை ஏற்க மறுத்த செந்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்ததால் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட செந்தில் கூறியதாவது- ஏற்கனவே மனைவியை இழந்த நான் கடும் துயரத்தில் இருந்த போது சம்பந்தப்பட்ட அந்த பெண் என்னிடம் ஆறுதலாக பேசி எனது மனதை மாற்றினார், தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்திற்கு வந்து அங்குள்ள ஒரு கோவில் முன் என்னை தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார் .

பிறகு என் வீட்டிற்கு வந்த அவர் எனது மனைவி , மகன் நகைகள் , பணம் மற்றும் செல்போன் உள்பட விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு திடீரென மாயமானார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரை சென்று மீண்டுள்ளேன்.

இதுபோல் அந்த பெண் வேறு யாரையும் ஏமாற்றாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அவரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும், இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!