தலைமறைவு வாழ்க்கை வாழும் ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர்!

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது.

இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அவரும், மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பொதுமக்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

பரிசு விழுந்த மறுநாள், அனுப்புக்கு வரிபிடித்தம் போக சுமார் ரூ.15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.

பணம் கிடைத்த பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக்கூறினார். அதன்பின்பு தான் அவருக்கு துயரம் தொடங்கியது. தினமும் அனுப்பிடம் உதவி கேட்டு ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வரத்தொடங்கினர்.

ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் தாருங்கள் எனவும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவுங்கள் என்றும் அவரை தேடி பலரும் வரத்தொடங்கினர். அதுமட்டுமின்றி அனுப்பின் உறவினர்களும், வீட்டுக்கு வந்து எங்களுக்கும் கொஞ்சம் பணம் தா, என கேட்டனர். இது மட்டுமின்றி கடைக்கு சென்றால் பொருளின் விலையை விட கூடுதலாகவும் சிலர் பணம் கேட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பணம் கேட்டு மிரட்டவும் செய்தனர்.

பரிசு விழுந்த சில நாட்களிலேயே தனது நிலை ஒரேயடியாக மாறி போனதை கண்டு அனுப் திகைத்து போனார். வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்தார். இதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்கிறார். தலைமறைவு வாழ்க்கை நடத்தும் அனுப் இது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- ரூ.25 கோடி பரிசு விழுந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது அதை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன். பரிசு பணம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்குள் ஒவ்வொருவரும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.

இதனால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. என் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும் முடியாமல் தவிக்கிறேன். வெளியே சென்றால் என்னை அடையாளம் கண்டு கொண்டு ஒவ்வொருவரும் பணம் கேட்கிறார்கள். இதற்கு அந்த பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம்.

லாட்டரியில் 3-வது அல்லது 4-வது பரிசு விழுந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இப்போது என் நிம்மதியே போச்சு. இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்துவது எப்படி? அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது கூட எனக்கு தெரியாது. இதற்காக தொழில் வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன்.

இப்போதைக்கு எனக்கு கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய உள்ளேன். எனது முடிவால் யாரும் என்மீது கோபப்பட வேண்டாம். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதற்கிடையே கேரள அரசு முதல் பரிசு பெற்ற அனுப்புக்கு பரிசு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. பணத்தை எவ்வாறு செலவளிப்பது, அதனை பாதுகாப்பாக முதலீடு செய்வது குறித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை கேரள நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!