அவளே என் கடவுள்… மகளை பறிகொடுத்து கலங்கி நிற்கும் கவிஞர் கபிலன்!

தனது 28 வயது மகளை வாரிக்கொடுத்த கவிஞர் கபிலன் உருக்கமாக மகளின் பிரிவை பகிர்ந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தனது மகள் குறித்து உருக்கமாக கவிதை எழுதியுள்ளார் கவிஞர் கபிலன்.

கவிஞர் கபிலன்

புதுச்சேரியை பூர்விகமாக கொண்டவர் கவிஞர் கபிலன். 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என்று பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பாடலாசிரியராக அறிமுகமானார்.

பல பாடல்கள்

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் கபிலன். வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார் கபிலன்.

மகள் தற்கொலை

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி இரவு கபிலனின் 28 வயது மகள் தூரிகை கபிலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டிஜிட்டல் மேகஸின் ஒன்றை நடத்தி வந்த தூரிகை, சினிமாவிலும் காஸ்ட்யூம் டிசைனராக இருந்து வந்தார்.

பெரும் அதிர்ச்சி

திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

வலிகளை வார்த்தையாக

பிரபலங்கள் பலரும் தூரிகையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மகளை பறிகொடுத்து நொறுங்கிப் போய் நின்ற கபிலனுக்கும் ஆறுதல் கூறினர். இந்நிலையில் மகளை பறிகொடுத்துவிட்டு தான் அனுபவித்து வரும் வலிகளை வார்த்தையாக வடித்துள்ளார் கபிலன்.

செத்து மிதக்கிறேன்

பிரபல வார இதழில் கபிலன் சிந்தியிருக்கும் கண்ணீர் துளிகள்,

எல்லா தூக்க மாத்திரைகளையும்

அவளே போட்டுக்கொண்டால்

நான் எப்படித் தூங்குவேன்…!

எங்கே போனாள்

என்று தெரியவில்லை

அவள் காலணி மட்டும்

என் வாசலில்..!

மின் விசிறி

காற்று வாங்குவதற்கா…

உயிரை வாங்குவதற்கா..?

அவள் கொடுத்த

தேநீர் கோப்பையில்

செத்து மிதக்கிறேன்

எறும்பாய்…?

அவளுக்கு

கடவுள் நம்பிக்கை

இருக்கா இல்லையா

எனக்குத் தெரியாது

அவளே என் கடவுள்…!

குழந்தையாக

அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற பாரம்

இன்னும் வலிக்கிறது.

கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா கண்களின் வலி.

யாரிடம் பேசுவது

எல்லா குரலிலும்

அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம்

வீடு முழுக்க நிரம்பியிருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு.

பகுத்தறிவாளன்

ஒரு கடவுளை புதைத்துவிட்டான்..-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!