பெண்ணின் வயிற்றில் இருந்த 55 பேட்டரிகளை அகற்றி மருத்துவர்கள் சாதனை!

அயர்லாந்து நாட்டில் ஒரு வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

66 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் செயலில் 50க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பேட்டரிகளை விழுங்கியுள்ளார்.

அயர்லாந்து மருத்துவ நாளிதழான ‘தி ஹப் போஸ்டில்’ வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையின் படி, டப்லின் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது, அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பேட்டரிகள் இருப்பது உறுதியானது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது இரைப்பை குடல் (ஜிஐ) பாதையை அடைத்துக்கொண்டு அதை தடுக்கும் வகையில் பேட்டரிகள் எதுவும் எக்ஸ்-ரேவில் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியேறும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர். ஒரு வார காலப்பகுதியில், அந்தப் பெண் நோயாளி ஐந்து ஏஏ பேட்டரிகளை இயற்கையாக வெளியேற்றினார்.

ஆனால் அதன்பின் அந்தப் பெண்ணுக்கும் வயிற்று வலி வர ஆரம்பித்தது. அதன்பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் சிறிய துவாரமிட்டு, 46 பேட்டரிகளை அயர்லாந்து மருத்துவர்கள் குழுவினர் அகற்றினர்.

மீதமுள்ள 4 பேட்டரிகள், பெருங்குடலில் சிக்கி, அவளது மலக்குடலில் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டன. இதன்மூலம் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில், பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.இப்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!