‘ஹிஜாப் சரியாக அணியவில்லை’ – போலீசாரால் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது குடும்பத்துடன் கடந்த செவ்வாய்கிழமை தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.

அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை நெறிமுறை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கடுமையாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பின்னர், மாஷாவை தடுப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தும் மாஷாவை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், போலீசார் தாக்கியதால் கோமா நிலைக்கு சென்று கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாஷா அமினி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!