கண் பார்வையை இழக்க போகும் குழந்தைகள்… உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்!

கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர்- எடித் லேமே தம்பதி உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பயணத்திற்கு பின் காரணம் தான் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் மூன்று பேர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றம் ஆகும். கண்களின் வெள்ளை விழிப்பகுதி மொத்தமாக இதனால் பாதிக்கப்படும். இந்த பாதிப்பிற்கு முழுமையாக சிகிச்சை இல்லை.

இவர்களின் மூத்த குழந்தையான மியாவுக்கு மூன்று வயதாக இருந்தபோது பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. அதன்பிறகு, அவர்களின் மற்ற குழந்தைகளான கொலின் (இப்போது 7) மற்றும் லாரன்ட் (இப்போது 5) அதே பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது 9 வயதாக இருக்கும் லியோ மட்டுமே இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளார்.

ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா பாதிப்புக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், வருங்காலத்தில் அவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படும். இதனால் அவர்களின் குடும்பம் மொத்தமாக உலகத்தை சுற்ற முடிவு செய்துள்ளனர்.

வீட்டில் உள்ள 3 குழந்தைகளுக்கும் பார்வை பறிபோகும் முன் இந்த பயணத்தை மேற்கொள்ள அவர்களின் குடும்பம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

பல நாடுகளுக்கு இதுவரை அவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தோனேசியாவிற்கு பயணம் செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு வரும் முடிவில் உள்ளனர்.

இது குறித்து பெல்டியர்- எடித் தம்பதி கூறுகையில், “நீங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியாது. இந்த பாதிப்பு எவ்வளவு வேகமாகப் போகிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியில் முற்றிலும் பார்வையற்றவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!