பாசமாக வளர்த்த முதியவரை அடித்து கொன்ற கங்காரு- ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் (வயது 77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது.

கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டரின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் கிடந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக போலீசார், மருத்துவகுழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் பீட்டருக்கு முதலுதவி செய்ய முயற்சித்தனர். ஆனால், பீட்டரை தாக்கிய செல்லப்பிராணி கங்காரு அவரது அருகே மருத்துவக்குழு செல்ல விடாமல் தடுத்து தாக்க முயற்சித்தது.

இதையடுத்து, அந்த கங்காருவை போலீசார் சுட்டுக்கொன்றனர். பின்னர், பீட்டரை மீட்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், கங்காரு தாக்குதலில் படுகாயமடைந்த பீட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 86 ஆண்டுகளில் கங்காரு தாக்கி மனிதர் உயிரிழக்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1936 ஆம் ஆண்டு காங்காரு தாக்கி ஒரு நபர் உயிரிழந்தார். அதன் பின் மனித உயிரிழப்பு நிகழ்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவில் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!