புதினுக்கு நெருக்கமான உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி!

ரஷியாவை சேர்ந்த மூத்த அரசியல் தத்துவ அறிஞர் அலெக்சாண்டர் டுகின். தீவிர ரஷிய தேசியவாத சித்தாந்தத்தை கொண்ட இவர் அதிபர் புதினின் உதவியாளர் ஆவார். புதினுக்கு மிகவும் நெருக்கமான இவரை ரஷிய ஊடகங்கள் ‘புதினின் மூளை’ என்றே அழைக்கின்றன. புதின் அரசின் எந்தவொரு முக்கிய நடவடிக்கையிலும் அலெக்சாண்டர் டுகினின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷிய போரை அலெக்சாண்டர் டுகின் தீவிரமாக ஆதரித்து வருகிறார். இதனால் அவர் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அலெக்சாண்டர் டுகினின் மூத்த மகள் டார்யா டுகினா. 30 வயதான இவர் ரஷியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். தனது தந்தையை போல தீவிர ரஷிய தேசியவாதியான இவர், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

ரஷியாவின் படையெடுப்பை நியாயப்படுத்தி ஆன்லைனில் தவறான தகவல்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் டார்யா டுகினா மீது பொருளாதார தடைகளை விதித்தன. ஏற்கனவே அவரது தந்தை மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்ததை கவுரவமாக கருதுவதாக டார்யா டுகினா அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள போல்ஷியே வியாசெமி என்ற இடத்துக்கு அருகே டார்யா டுகினா தனது தந்தையின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தீப்பிடித்து எரிந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசைக்கு சென்று கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் டார்யா டுகினா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே குண்டு வெடிப்பு நடந்த கார் டார்யா டுகினாவின் தந்தையும், அதிபர் புதினின் உதவியாளருமான அலெக்சாண்டர் டுகினின் கார் என்பதால் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மாஸ்கோ அருகே நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அலெக்சாண்டர் டுகின் மற்றும் தர்யா டுகின் ஆகிய இருவரும் ஒரே காரில் வீடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அலெக்சாண்டர் டுகின் தனது பயணத்திட்டத்தை மாற்றியதால் தர்யா டுகின் மட்டும் காரில் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியாவில் அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!