என்.எல்.சி. தொழிலாளி மரணம்… மகளின் காதலனுடன் மனைவி கைது!

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளியை அவரது மனைவி, மகளின் காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தார். இந்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி டவுன்ஷிப் 4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (வயது 50). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி நிர்மலா என்ற ஷகிலா(48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2-வது மகளும், மகனும் சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். 2-வது மகள் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

மனைவியிடம் தகராறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திடம் அவரது மனைவி ஏன் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சண்முகம் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷகிலா வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் படுத்து தூங்கினார்.

வெட்டுக்காயங்களுடன் கிடந்தார்

நேற்று காலை வேலைக்கு செல்ல வேண்டிய சண்முகம் வீட்டின் கதவை திறக்காமல் இருந்தார். இதை பார்த்த அவரது மனைவி, கதவை தட்டினார். ஆனால் சண்முகம் திறக்கவில்லை. உடனே, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு வீட்டின் உள்ளே சண்முகம் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷகிலா, உடனடியாக டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சண்முகம் இறந்து கிடந்தார். இதன் மூலம் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த நாய், சிறிது தூரம் சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், சண்முகம் உடலை போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சண்முகத்தின் அண்ணன் பிச்சையாபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனைவி மீது சந்தேகம்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, நகர போலீசார், டெல்டா பிரிவு போலீசார் கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே சண்முகம் கொலை செய்யப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும், வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வந்துவிட முடியும்.

எனவே இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான், உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்படி, முதலில், சண்முகத்தின் மனைவி ஷகிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மகளின் காதல்

அதாவது, சண்முகத்திற்கும் சுகந்தி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. சண்முகம் தான் வாங்கும் சம்பளத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் தனது குடும்பத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதற்கிடையே, சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

மகளின் காதலனுடன் சேர்ந்து கொன்றார்

இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது. மகளின் காதல் விவகாரம் அவருக்கு தெரிந்தால், எதிர்ப்பு தெரிவித்து இடையூறாக இருப்பார் என்று ஷகிலா எண்ணினார். எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, இது குறித்து மகளின் காதலனான தமிழ்வளவனிடம் தெரிவித்தார்.

அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு ஷகிலா தமிழ்வளவனுக்கு போன் செய்து வீட்டுக்கு வர வைத்துள்ளார். பின்னர் நள்ளிரவில் ஷகிலாவும், தமிழ்வளவனும் சேர்ந்து சண்முகத்தை வெட்டி கொலை செய்து விட்டு, பின்பக்க வாசல் வழியாக வெளியே வந்துவிட்டனர். பின்னர் காலையில் ஷகிலா தனக்கு எதுவும் தெரியாதது போன்று நாடகமாடி போலீசை ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

தொழிற்சங்க நிர்வாகி

இதையடுத்து, ஷகிலா, தமிழ்வளவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இறுதிவரையில் மகளின் காதல் விவகாரம் குறித்து சண்முகம் தெரிந்து கொள்ளாமலே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சண்முகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!