ஒரே விமானத்தில் விமானியான தாய் – மகள்!

ஹோலி என்ற பெண்மணி தனது கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக தனது விமானப் பயணத்தைத் தொடங்கினார்.

ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பிய அவர், தனது மகள் கெல்லிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, விமானி ஆவதற்குப் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு கெல்லி உட்பட 3 குழந்தைகள் இருந்தாலும் ஹோலி தனது கனவைக் கைவிடவில்லை.

ஹோலி கடந்த 18 வருடங்களாக விமானியாகப் பணியாற்றி வருகிறார். தாயைக் கண்டு தானும் விமானி ஆக வேண்டும் என முடிவு செய்த கெல்லி, 14 வயதில் இருந்தே அதற்காக பயிற்சி மேற்கொண்டார்.

விமானி உரிமம் பெற்ற பிறகு, அவர் 2017-இல் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் இன்டர்ன்ஷிப்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2-வது வாய்ப்பே இல்லாமல் அவர் சவுத் வெஸ்ட் நிறுவனத்தின் விமானியாகப் பணிக்கு சேர்ந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 23-ம் தேதி டென்வரில் இருந்து செயின்ட் லூயிஸுக்கு சென்ற விமானத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். தனது மகளை விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அறிமுகப்படுத்திய ஹோலி, இந்த நாள் தனக்கு ஒரு சிறப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சவுத்வெஸ்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தான் இந்த வேலையில் மிகவும் விரும்பி இணைந்ததாகவும், தன்னைப் போலவே தனது மகளும் இந்த வேலையின் மேல் காதல் கொண்டுள்ளதாகவும் ஹோலி கூறியுள்ளார். இந்த சாதனை தாய் – மகள் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளன.-News & image Credit: zeenews * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!