ஆண் குழந்தை கேட்டு டார்ச்சர்… அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் விபரீதமுடிவு

இந்தியாவில், உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (வயது 30) என்பவருக்கு, ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதன்பின்னர், தனது கணவர் சந்துவுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பறந்து சென்றார்.

இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மன்தீப் கவுர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், எட்டு ஆண்டுகளாக தனது கணவர் அடித்து, துன்புறுத்தி வந்த விவரங்களை வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

மற்றொரு வீடியோவில், மன்பிரீத் அடிக்கப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றி மன்பிரீத்தின் சகோதரி குல்தீப் கவுர் கூறும்போது, எனது சகோதரியை ஆண் குழந்தை பெற்று எடுக்க கோரி கொடுமைப்படுத்தி உள்ளனர். ரூ.50 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படியும், கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், மன்தீப்பின் தந்தை ஜஸ்பால் சிங், பிஜ்னோர் நகரில் போலீசிடம் புகார் அளித்து உள்ளார். அதில், சந்துவின் தந்தை முக்தார் சிங், தாய் குல்தீப் ராஜ் கவுர் மற்றும் சகோதரர் ஜஸ்வீர் சிங்கின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தற்கொலை என்பதற்கு பதிலாக, படுகொலை என்ற ரீதியில் நியூயார்க காவல் துறை விசாரித்து வருகிறது என கூறப்படுகிறது.

மன்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு இன்ஸ்டாகிராமில், தி கவுர் இயக்கம் என்ற பெயரில் விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், மன்தீப் கூறும்போது, தனது கணவருக்கு திருமணத்திற்கு வெளியே சட்டவிரோத உறவு உள்ளது என்றும், குடித்து விட்டு தினமும் அடிப்பது வழக்கம் என்றும் தெரிவித்து உள்ளார்.

கணவரின் துன்புறுத்தலால் களைத்து போய் விட்டேன் என அவர் மற்றொரு வீடியோவில் வருத்தத்துடன் பேசிய பின்னர், நியூயார்க் நகரில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. மன்தீப்பின் குடும்பத்தினர், திருமண ஆல்ப புகைப்படங்களை பார்த்து வேதனையுடன் தங்களது மகளை நினைவுகூர்கின்றனர்.

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அமெரிக்காவில் தூக்கு போட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய தூதரகம் முன் வந்துள்ளது. அவரது மரணம் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. இவ்வளவு நடந்த பின்னரும், சந்துவிடம் ஏன் 2 மகள்களும் உள்ளனர்? என்றும் மன்தீப்பின் இறுதி சடங்கை செய்ய சந்துவுக்கு அனுமதி அளிப்பது ஏன்? என்றும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நியூயார்க் நகரில் குயின்ஸ் பகுதியில் சோகமான முறையில் மன்தீப் கவுர் மரணம் அடைந்ததில் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அளவிலான அதிகாரிகளுடனும் மற்றும் இந்திய சமூகத்தினரிடமும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என தெரிவித்து உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!