காமம் ஏன் சுகமாக இருக்கிறது..? மிருகங்களுக்கும் அப்படித்தான் இருக்குமா..?


“செக்ஸ் ஏன் சுகமாக இருக்கிறது? உடலுறவு என்பது மிருகங்களுக்கும் இன்பமானதாகவே இருக்குமா?“

“மற்ற மிருகங்களைப் பொறுத்தவரை இனவிருத்தி நடவடிக்கை என்பது – வேட்டையாடுதல், உணவருந்துதல், தன் வசிப்பிடத்தைப் பாதுகாத்தல், தன் குட்டிகளைப் பேணுதல் என்பது போன்ற பிற நடவடிக்கைகளைப் போலவே, அதுவும் ஓர் உந்துதல்தான்.

வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் ஏற்படும் உடல் மாறுதல்களால் உந்தப்பட்டு, எதிர்பாலின விலங்கோடு காதலில் ஈடுபடுதல் என்பது புரோகிராம் செய்யப்பட்ட ஒரு சம்பிரதாயம். மற்றபடி சேரும்போதோ, சேர்க்கை முடித்துப் பிரியும் போதோ, விலங்குகள் பெரிய அளவில் பரவசப்படுவதே இல்லை.

பரிணாம ஏணியில் மனித இனத்துக்கு முன்படி என கருதப்படும் கொரில்லா, சிம்பான்ஸி, உராங்உடான் போன்ற குரங்கினங்கள் கூட இனச்சேர்ககையின் போது அசட்டையாகத்தான் ஈடுபடுகின்றன. ஆக, அனைத்து ஜீவராசிகளையும் ஒன்று திரட்டிப் பார்த்தால், காமத்தில் அதிக இன்பம் காணும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே!

மிருகங்களது சின்னஞ்சிறு மூளையின் பெரும்பகுதிஉணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. அதை அடக்கி ஆளும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. எது எப்போது தோன்றுகிறதோ அதை அப்போதே அப்படியே செய்துவிடல் என்ற உணர்ச்சி வசப்படும் தன்மை அதிகம்.


ஆனால் மனிதனின் மூளையோ மிகப் பெரியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சிகளை அடக்கி சுயகட்டுப்பாட்டுடன் சிந்தித்து, சூழலுக்குத் தகுந்தாற்போல் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது முன்மூளை. வேறு எந்த விலங்குக்கும் இத்தனை நுணுக்கமான முன்மூளை கிடையாது. அதனால் அவை உணவு, உஷ்ணம், உடலுறவு, பாதுகாப்பு என்ற நான்கு தேவைகளைத் தீர்த்துக்கொள்ள உயிர் வாழுகின்றன.

ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படை தேவைகளைத் தவிர பல உயரிய தேவைகளும் உண்டு. “நான் யார்? என் இலக்கு என்ன? நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்து யார்? என் பிறவிப்பயன் என்ன?“ என்று தன்னைத்தானே சுயபரிசோதனை செய்வதில் அவனுக்கு சுவாரசியம் அதிகம்.

ஆராய்ச்சிப் போக்கு, விசால மனப்பான்மை, கலையார்வம், ரசனை, ஞானம், அறிவுப் பசி, ஆத்ம திருப்தி, படைப்புத்திறன் என்று மனிதனின் முன்மூளை பேரின்ப விஷயங்களைப் பற்றியே பெரிதும் சிந்திக்கிறது. சிற்றின்ப சங்கதிகளை மூடி மறைத்து கன்ட்ரோல் பண்ணிக்கொள்கிறது அல்லது மிருகங்களைப் போல நினைத்த நேரத்தில் தீர்த்துக்கொள்வதில்லை. மூடி மறைப்பதால் கவர்ச்சி அதிகமே. சுகமும் அதிகம்தான்!-Source: tamil.eenaduindia

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி