கருவுற்றுள்ள தாய் இந்த பரிசோதனையை ஏன் கட்டாயம் செய்ய வேண்டும் தெரியுமா..?


குளுக்கோஸ் பரிசோதனை பற்றி பலர் எம்மில் அக்கறை கொள்வதில்லை. இந்த சோதனையை ஏன் மேற்கொள்ள வேண்டும் என பார்ப்போம். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்யக்கூடிய கர்ப்பகால நீரிழிவு நோயினால் கருவுற்றுள்ள தாய் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

கர்ப்பிணித் தாய் ஒருவர் கருவுற்று 25ஆவது மற்றும் 28ஆவது வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏறக்குறைய 3 தொடக்கம் 5 சதவீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்படுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியனவே இந்த நிலைமை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.


சிலவேளை, தாய் ஒருவர் கருவுறுவதற்கு முன்னதாகவே நீரிழிவு நோயினால்
பாதிக்கப்பட்டிருப்பாராயின் அவர் குறித்த பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை. அதற்கு பதிலாக வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறிருக்க, தாய் ஒருவர் எவ்வாறு குறித்த குளுக்கோஸ் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என பார்ப்போம். இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு சுமார் ஓரு மணித்தியாலத்திற்கு முன்னதாக தாய் ஒருவருக்கு 50 கிராம் சீனி உள்ளடங்கிய கலவை ஒன்று வழங்கப்படும். குறித்த கலவையை உட்கொண்டு ஒரு மணித்தியாலம் கழிந்த பின்னர் இந்த குளுக்கோஸ் சோதனை மேற்கொள்ளப்படும்.


இதே வேளை இந்த சோதனை கட்டாயமானதா என நீங்கள் வினவினால், அதற்கு ஆம் எனக் கூறுவதே பொருத்தமானது. உடல் நிறை கூடிய தாய்மார்கள் மற்றும் பரம்பரை நோயாக நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சோதனையை மேற்கொள்வது அவசியம் எனும் தீர்மானத்திற்கு வரலாம்.

பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் என்பவற்றிலிருந்து விடுபட இந்த சோதனை பெரும் பங்காற்றுகின்றது. கண் இமைக்கும் பொழுதில் முழு உலகமே மாறிக்கொண்டு வரும் நிலையில், கர்ப்ப காலத்தை பிரச்சினைகளின்றி கழிக்க இந்த சோதனையை மேற்கொள்வது சிறந்தது.-© tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி