மை டியர் பூதம் திரைவிமர்சனம்!

பூதங்களின் உலகில் அம்மக்களின் அரசனாக விளங்குபவர் கற்கிமுகி (பிரபு தேவா). குழந்தை இல்லாத அவரின் பல வருட வேண்டுதலுக்கு பிறகு கிங்கினி என்ற மகன் பிறக்கிறான். அவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்ப்பாராத விதமாக ஒரு முனிவரின் தவத்தை கலைத்து விடுகிறான்.

கற்கிமுகியின் மகன் செய்யும் தவறுக்காக அந்த சாபத்தை தான் ஏற்கிறார். இதனால் அவர் கற்சிலையாக மாற்றி பூமியில் வீசிப்படுகிறார். பூமியில் கற்சிலையாக மாறியிருக்கும் கற்கிமுகியை எதிர்பாராத விதமாக தொட்டு அவரின் அந்த சாபத்தில் இருந்து திருநாவுக்கரசு (அஷ்வந்த்) விடுவிக்கிறான். தன்னுடைய தாயுடன் (ரம்யா நம்பீசன்) வாழ்ந்து வரும் திருநாவுக்கரசுக்கு கற்கிமுகி எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறான்.

திருநாவுக்கரசு எண்ணுவதை பேச்சின் மூலம் வெளிப்படுத்டுவதில் தடுமாற்றம் இருப்பதால் கற்கிமுகியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து அவன் எப்படி அந்த மந்திரத்தை சொல்கிறான்? பூத உலகிற்கு செல்ல திருநாவுக்கரசு உதகிறானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

குழந்தைகளை இலக்காக கொண்டு மை டியர் பூதம் படத்தை இயக்கி அதில் சிறந்து விளங்கி இருக்கிறார் இயக்குனர் என்.ராகவன். இவரின் முந்தய படமான மஞ்சப்பை படத்தில் இடம்பெறும் வெங்கடசாமியின் (ராஜ்கிரண்) குறும்புத்தனமான கதாப்பாத்திரத்தை போன்று, இப்படத்தின் கதாப்பாத்திரங்களை வடிவமைத்து பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

பூதம் மற்றும் சிறுவனுக்கு இடையே உள்ள காமெடி மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். அதிகபடியாக இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் காமெடி கலந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரபு தேவா, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பாடல்களில் இடம்பெறும் பிரபு தேவாவின் நடன வடிவமைப்பு அனைவருக்கும் விருந்தளித்திருக்கிறது. மற்றொரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஷ்வந்த் அவனின் குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் படியும் ரசிக்க வைக்கும் படியும் உள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்திற்கு வலுவை சேர்த்துள்ளது. ரம்யா நம்பீசன் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

டி.இமானின் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல்கள் குழந்தைகள் கொண்டாடும் வகையில் வடிவமைத்து பாராட்டை பெற்றுள்ளார். யு.கே.செந்திலின் ஒளிப்பதிவு சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது. கதைக்கு தேவையான காட்சிகளை எதார்த்தமாக எடுத்திருக்கிறார். மொத்ததில் ‘மை டியர் பூதம்’ குழந்தைகளின் மாயவன்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!