கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்த 3 வயது சிறுவன்!

புதுக்கோட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள், வரத விநாயகர், செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த கோவிலில் எந்த நிகழ்வும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் சேந்தமங்கலம் கிராமத்தினர் ஒன்றுசேர்ந்து கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டும் பணி முடிந்து கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட பூமி நீளா சமேத பெருந்தேவி, வரதராஜ பெருமாள் என மூன்று தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு தெய்வங்களுக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த திருக்கல்யாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பக்தி சிரத்தையுடன் பெருமாள் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாய் சிவா என்ற 3 வயது சிறுவன் சிறுவர்களுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்து தாளம் இசைத்து அசத்தியது திருக்கல்யாணத்தை பார்க்க வந்த பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுவன் சாய் சிவாவின் பெற்றோரும் இசை மீது தணியாத ஆர்வம் கொண்டவர்கள் ஆவர். அத்துடன் அவர்கள் மகன் பிறந்தது முதலே கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்து செல்வது, அங்கு இசைக்கப்படும் இசையை கேட்க செய்வது என்று பழகிக்கொடுத்து வந்துள்ளனர். அதன் நீட்சியாக சாய் சிறுவன் தற்போது முதலே இசை ஆர்வம் கொண்டு திருவிழாக்களில் மிருதங்கம் வாசிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளான். திருக்கல்யாணம் நடைபெற்றபோது பக்தர்கள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என கோசம் எழுப்பி திருக்கல்யாணத்தை பார்த்து ரசித்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!